வங்க கடலில் உருவான புயல் பாம்பனுக்கு 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருக்கோணமலைக்கு 200 கிமீ, கன்னியாகுமரிக்கு 600 கிலோ மீட்டர் தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல், கரையை கடக்கும்போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. 12 மணி நேரத்தில் புயல் மேலும் வலுவடையும் எனவும் இன்று மாலை அல்லது இரவில் திருக்கோணமலை அருகே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரள தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குமரி, நெல்லை, தென்காசி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடல் சீற்றம் காரணமாக பூம்புகார் , தரங்கம்பாடி உட்பட 26 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடலுக்கு 161 விசைப்படகுகளில் 1500 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் கரை திரும்பி வருகின்றனர்.