ஆயிரத்தில் ஒருவன் – கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடித்து வெளியான படம் “ஆயிரத்தில் ஒருவன்”. வெளியானபோது இந்த படத்திற்கு கிடைக்காத வரவேற்பு 10 வருடங்கள் ஆகியும் தற்போது கூடிக்கொண்டே போகிறது என்பதே உண்மை. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஆயிரத்தில் ஒருவன் எதிர்பார்த்த வெற்றியை அடைய வில்லை. ஆனால், கடந்த 10 வருடங்களில் இந்த படத்தை பலமுறை ரீ -ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. செல்வராகவனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் செல்வராகவன்.
“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் சோழ பேரரசின் ஒரு காலகட்டத்தின் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதன் முடிவில், சோழன் பயணம் தொடரும் என்று முடிக்கப்பட்டது. ஆகையால், இதன் 2 ஆம் பாகம் எப்போது வருமென்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இயக்குனர் செல்வராகவனும் அவ்வப்போது இதன் 2 ஆம் பாகம் நிச்சயம் எடுக்கப்படும் என்று தெரிவித்துவந்தார்.
நேற்று புத்தாண்டு அன்று செல்வராகவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Aayirathil Oruvan 2 பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் செல்வராகவன். நடிகர் தனுஷுக்கு வரிசையாக அரை டசன் படங்கள் கைவசம் உள்ளன. அவற்றையெல்லாம் முடித்துவிட்டு இதில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின், ப்ரீ – ப்ரொடக்ஷன் மட்டுமே ஒரு ஆண்டுக்கு மேல் நடைபெறும் என்று தனுஷ் கூறியுள்ளார்.
மேலும், செல்வராகவன் வெளியிட்டுள்ள போஸ்டரில் 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். “இதுவரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னாள்” என்று கூறி போஸ்டரை வெளியிட்டுள்ளார் செல்வராகவன். சோழனின் பயணம் தொடர்கிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.