வங்கக்கடலில் உருவான அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளது. அதற்கு “நிவர்” என்று பெயர் வைக்கப்பட்டது. இது நாளை மாலை சென்னை அருகில் உள்ள மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் ஒரே இடத்தில் மைய்யம் கொண்டுள்ளது. இதனால், இதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. நாளை மாலை அது கரையை கடக்கும் என்று இருந்த நிலையில் தற்போது அது தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் மழை கொட்டி தீர்த்தத்தால் நுங்கம்பாக்கம், மாம்பலம் பகுதிகளில் 7 செ.மீமழை பதிவாகியுள்ளது. கடலூர், விழுப்புரம், காரைக்கால் பகுதிகளிலும் விடாது மழை பெய்து வருகிறது.
தற்போது “நிவர் புயல்” சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கடுமையான சூறாவளி புயலாக 100-110 கிமீ வேகத்தில் 120 கிமீ வேகத்தில் வீசும்’ என்று தெரிவிக்கப்பட்டது.