நாளை காலை உலகம் அபார வெற்றி பெறும்!

கொரோனா ஊரடங்கின் அனுபவங்கள்:

மார்ச் 23 2020 அன்று முதல் அடுத்த இரண்டு வாரத்திற்கு சுழற்சி முறைப்படி என்னை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள் அதாவது வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டிய சூழல். ஒருவேளை ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் அதை கையாளுவதற்கான அலுவலகத்தின் யுக்தி. அதிர்ஷ்டமோ துரதிஷ்டமோ இன்றுடன் 154 நாட்கள் ஆகிறது அலுவலக வாசல் மிதித்து. என் சுழற்சி முடிந்ததும் ஊரடங்கு அமலுக்கு வந்தது தனிநபராக எனக்கு மகிழ்ச்சியையேக் கொடுத்தது. காரணம் எனது 9 ஆண்டு அலுவலக வாழ்க்கையில் இல்லத்தில் இருந்ததைவிட அலுவலகத்தில் இருந்த நேரமே அதிகம். அப்படிப்பட்ட எனக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே கண்ணில் பட்டது. என் மகனுடன் மனைவியுடன் என் அலுவலை தொடர்வது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன் தவறிய என் தந்தையை பெரிதும் நினைத்துக் கொண்டேன். என்னதான் நான் வீட்டில் இருந்தாலும் என் மனைவியின் இயல்பு வாழ்க்கை மாறவே இல்லை. சொல்லப்போனால் அவளது பளு சற்று கூடியிருந்தது.

காலைக் காப்பி முதல் இரவு பால் வரை பம்பரமாய் சுழலும் என் மனைவியை பார்க்க முடிந்தது. ஊரடங்கின் முன்னறிவிப்பு எங்கள் மளிகை சாமான் அலமாரியை கிடங்காய் மாற்றியது. வாட்ஸ்அப் குரூப்பில் நண்பர் இட்ட ஒரு பதிவு அவர் பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு அவர் செய்த உதவியின் மளிகை கடை ரசீது. இதைப் பார்த்ததும் நண்பருக்கு அழைத்து வாழ்த்துக்கள் கூறி நானும் பங்கேற்க விரும்புவதாக கூறி ஒரு சிறிய தொகையை அனுப்பினேன். மறுநாள் ஒரு புதிய எண்ணிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு அண்ணா மிகவும் நன்றி தாங்கள் அனுப்பிய பொருட்கள் வந்து சேர்ந்தன என்று. ஒரு பயனாளி என்று புரிந்து கொண்டேன், நான் இதுபோல கல்விக்காக பயனாளியாக இருந்த நாட்களை நினைத்துக்கொண்டேன். அடுத்து அடுத்து வந்த மாதங்களில் இதைத் தொடர முடியா விட்டாலும் ஒரு குடும்பத்திற்கு ஒரு முறை உதவி செய்தது திருப்தி அளித்தது.

ஊரடங்கு நாட்கள் நீண்டு கொண்டே செல்ல அலுவலகப் பணி சற்று அலுப்பு தட்டினாலும் இல்லத்திலிருந்து பணிபுரிவது என் உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ள உதவியது. இந்த ஊரடங்கிற்கு இடையில் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு எந்தன் வாழ்வில். எந்த ஒரு நடுத்தர குடும்பத்தாருக்கும் கனவு தனக்கென்று ஒரு இல்லம், அதை ஊரடங்கிற்கு இடையே நிறைவேற்றியது காலமும் கடவுள் அருளும். ஊரடங்கினால் எனக்கு ஏற்பட்ட தாளாத வருத்தம் இந்த புதுமனை புகுவிழாவிற்கு என் நெருங்கி உறவுகளால் கூட பங்கு பெற இயலவில்லை என்பது.

என்னடா இவன் ஊரடங்கு பற்றி இவ்வளவு பேசி கொரானாப் பற்றி பேசவில்லையே என்று எண்ண வேண்டாம். பங்குச்சந்தை போல நாள் ஒருமுறை ஏற்றம் கண்ட எண்களும்.. கிரிக்கெட் ஸ்கோர் போல மணிக்கொருமுறை மாறிக் கொண்டிருந்த எண்களும் என் செவிகளையும் வந்துதான் அடைந்தன… இருப்பினும் நான் அதை வலுக்கட்டாயமாக புறக்கணித்தேன்… சிறுவயதில் கிரிக்கெட் பார்க்கும் போது இந்தியா தோற்கப்போவதாக தோன்றினால் டிவியை அணைத்துவிட்டு நண்பர்களிடம் கூட ஸ்கோர் பற்றி பேசாமல் புறக்கணித்து விடுவேன்.. எதேச்சையாக மறுநாள் செய்தித்தாளில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றதாக செய்தி வரும்… இன்றும் புறக்கணிக்கிறேன்.. நாளை காலை உலகம் அபார வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன்…

-Manikandan.R.
Assistant manager in a private firm

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top