போகுதே…போகுதே…./மறைந்த காந்த குரல்!

74 வயதாகும் பின்னணி பாடகரும்,நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் 1 மணி அளவில் காலமானார்.ஆந்திர மாநிலம் நெல்லூரில்,1946ம் ஆண்டு ஜூன் 4ல் பிறந்தார்.இவரின் தந்தையின் பெயர் எஸ்.பி.சம்பமூர்த்தி மற்றும் தாயின் பெயர் சகுந்தலம்மா ஆகும்.இவருடைய தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர்.இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா ஆகியோர் இளைய தங்கைகள் ஆவார்.சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார். தன் தந்தை ஹரிஹதத்தை சில இசை கருவிகளை வாசிக்கும் பொழுது அதனை கவனித்து, கற்று, இசை கருவிகளை தானும் வாசிக்கும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்,இவரின் தந்தை. ஆனால் டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது, ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ்.பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ்.பி.பிக்கு முதல் போட்டி பாடல் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.முதல் பரிசு பெற்றார்.

எஸ் பி பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா (15,டிசம்பர், 1966), இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார். அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் “நகரே அதே ஸ்வர்க” என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.அதற்குப்பிறகு எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார். மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் “இ கடலும் மறு கடலும்” பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி.சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.

எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது.இத்திரைப்படம் இயக்குனர் கே.விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது.கே விஸ்வநாத் எஸ்.பி.பிக்கு பெரியப்பா மகன் ஆவார்.இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே.வி.மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது.எஸ்.பி.பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரால் எடுக்கப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார். குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ்.பி.பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன.1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ் பி பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது.1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.

1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.பி.பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ்.பி.பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது. இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவைகளெல்லாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.

௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம் 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம்.எம். கீரவாணி ,எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும்.ஏ.ஆர். ரகுமானின் இசையில் ரோஜா படத்தில் எஸ்.பி.பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடினார்.புதிய முகம் திரைப்படத்தில் “ஜுலை மாதம் வந்தால்” பாடலை அனுபமாவோடு பாடினார்.அனுபமாவிற்கு அப்பாடல் முதல் பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் “மானூத்து மந்தையிலே மாங்குட்டி” பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ்.பி.பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.

பாலசுப்பிரமணியம்,இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.

எஸ்.பி.பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார்.

எஸ்.பி.பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் “நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்” தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.

பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார். இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் “ஹரிவராசனம்” விருது பெற்றுள்ளார்.

எஸ்.பி.பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ்.பி.பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன், நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.

1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

ரஜினி நடித்த பெருபாலான படங்களுக்கு ரஜினியின் ஓப்பனிங் சாங் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான்.முத்து படத்தில் இவரின் ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் இன்றும் மாஸாக இருக்கும்.

இயக்குனர்.வசந்த் இயக்கிய “கேளடி கண்மணி”என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.அதில்“மண்ணில் இந்த காதல்”என்னும் பாடலை மூச்சு விடாமல் பாடினார்.அப்பாடல் இன்றும் பேசப்படுகிறது.

இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது.இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.6 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.16 மொழிகளில் 40,000 பாடல்களை பாடியுள்ளார்.

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்ரமணியதிற்கு கடந்த மாதம் 5ம் தேதியில் உடனலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு சிறிய அளவில் கொரோனா தொற்று இருந்ததாகவும் கூறப்பட்டது.தான் நலமாக இருப்பதாக அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதன் பின்னர் அவர் கவலைக்கிடமானார்.ஆகஸ்ட்20ம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டி திரையுலகம்,மற்றும் பொது மக்கள்,என அனைவரும் கூட்டு பிராத்தனை செய்தனர்.இதனை இயக்குனர் பாரதிராஜா வழிநடத்தினார்.தொடர் சிகிச்சை காரணமாக அவர் நலமுடன் இருப்பதாக தகவலை அவ்வப்போது வெளியிட்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியதின் மகனும் பாடகருமான எஸ்.பி.சரண்.கடந்த 4ம் தேதியில் எஸ்.பி.பிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில் அவருக்கு கொரோனா இல்லை என்று வந்தது.

அதன் பின் நேற்று மீண்டும் அவரின் உடல் நிலை கவலைக்கிடமானது.கடுமையான சிகிச்சைகளை அளித்தும்,அவரின் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.51 நாட்கள் மருத்துவமனையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்.இன்று பிற்பகல் காலமானார்.ரஜினி,கமல் உள்பட திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றன.மழையையும் பொருட்ப் படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று பொது மக்கள் அஞ்சலி செய்து வருகின்றன.முகநூல்,போன்ற சமூக வலைத்தலங்களில் முழுவதும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றியே உள்ளது.பல மொழிகளிலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியதால் இந்தியா முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் அஞ்சலி செய்து வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

நாளை காலை 11மணியளவில் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்ரமணியதின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.நல்ல பாடகர்,நல்ல நடிகர்,என்பதையெல்லாம் தாண்டி எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு நல்ல மனிதர்.நாம் மற்றும் இந்திய திரை உலகம்,ஏன் உலக இசையே எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை இழந்து விட்டது.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு Chennaiyil.com கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

1 thought on “போகுதே…போகுதே…./மறைந்த காந்த குரல்!”

  1. Pingback: எஸ்.பி.பி அவர்கள் தான் வாங்கிய விருதுகளை வைப்ப...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top