அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் வி.சாந்தா காலமானார். சென்னை மயிலாப்பூரில் பிறந்த இவர் தனது மருத்துவ படிப்பை மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் முடித்தார். பின்பு, புற்று நோய் குறித்த முதுகலை படிப்பை முடித்தார். அதன் பிறகு, ஏழைகளின் புற்றுநோய் சிகிச்சைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியால் 1954 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது அடையார் புற்றுநோய் மையம். அதில், இயக்குனராக பணியாற்றிவந்தார் வி.சாந்தா அவர்கள். 94 வயதான டாக்டர் சாந்தா ஏழை எளிய மக்களுக்கு புற்று நோய் சிகிச்சையை எளிமையாக்கினார். குறிப்பாக, பாகுபாடின்றி அனைவருக்கும் இலவசமாகவும் அல்லது குறைந்த விலையிலும் சிகிச்சை அளித்து வந்தார். 1954 ஆம் ஆண்டு முதல் அதற்காக அவரது வாழ்வை அர்ப்பணித்து வந்தார். அவரது 93 வயதில் நாட்டின் உயரிய விருதுகளை பெற்று உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தார்.
குறிப்பாக, மருத்துவமனையில் நோயாளிகள், செவிலியர்களிடம் மிகவும் கனிவாக நடந்துகொள்வார் என தெரியவந்துள்ளது. இவ்வளவு சிறப்புகளையும், சாதனைகளையும் புரிந்த மருத்துவர் வி.சாந்தா இன்று அதிகாலை 3:55 மூச்சு திணறல் காரணமாக காலமானார். இவ்வளவு புகழுக்கு சொந்தக்காரியான சாந்தா அவர்களின் வீடு ஆடம்பரமாக இல்லை. அடையார் மருத்துவமனையின் மொட்டை மாடியில்தான் அவரது வீடு அமைய்ந்துள்ளது. நோயாளிகளுக்கு சமைக்கப்படும் உணவையே அவரும் உண்டு வந்துள்ளார். இது எல்லாவற்றையும் விட புற்று நோயாளிகளின் சிகிச்சைக்காக திருமணம் செய்து கொல்லாமல் தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளார்.
அம்மையாரின் மறைவையொட்டி பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக முதல்வர், எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களும் இரங்கலை தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அம்மையாரின் உடல் அவர் பணியாற்றிய அடையார் புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டது. தற்போது அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது. அதில், செவிலியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். பெசன்ட் நகர் மின்மயானம் நோக்கி இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று தகவல் தெரியவந்துள்ளது.
Also Read: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு