மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்ற நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் அந்த மாணவர்களுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்ற ஏராளமானோர் பீதி அடைந்துள்ளனர்.தமிழகத்தில்,எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்,சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது.முதல் நாளில்,அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் படி,எம்.பி.பி.எஸ்-313,பி.டி.எஸ்.-92 என ஒதுக்கப்பட்ட,405 இடங்களுக்கான கவுன்சிலிங் துவங்கியது.அன்றைய தினம்,262 மாணவர்கள் பங்கேற்று,235 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர்.முதல் 18 இடங்களை பெற்றவர்களுக்கு,முதல்வர் இ.பி.எஸ்,ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.முன்னதாக,கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர்.,வாயிலாக,கொரோனா தொற்று பரிசோதனை மேக்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தன.அதில்,நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனால்,கொரோனா உறுதியான மாணவர்களுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மற்ற மாணவர்களும்,அவர்களின் பெற்றோரும்,அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் பீதி அடைந்துள்ளனர்.அதே நேரத்தில்,நேற்றைய கவுன்சிலிங்கிற்கு வந்திருந்த மாணவர்கள்,பெற்றோர்,போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என,ஏராளமானோரும் அச்சம் அடைந்தனர்.இருப்பிலும்,நேற்று கவுன்சிலிங்கிற்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.இனி வரும் நாட்களில்,கவுன்சிலிங்கில் பங்கேற்க வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களில்,எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருக்குமோ,அவர்களால் மற்றவர்களுக்கு பரவுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே,முதல் நாள் போல கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள்,பெற்றோருக்கு,ஆர்.டி.பி.சி.ஆர்.,கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்,என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து,சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: முதல் நாளில் முதல்வர் வந்ததால்,கவுன்சிலிங் வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அடுத்ததடுத்த நாட்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படாது.அதற்கு பதிலாக,“தெர்மல் ஸ்கேனர்” வாயிலாக காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதிக்கிறோம்.தற்போது,தொற்று கண்டறியப்பட்ட நான்கு மாணவர்களின்,மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளித்துள்ளோம்.கவுன்சிலிங் வருபவர்களுக்கு காய்ச்சல்,சளி,இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால்,உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம்.இவ்வாறு,அவர்கள் கூறினர்.