நாடக உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் எஸ்.வி.சேகர்.அவர் தனது 70தா வது வயதை இன்று கொண்டாட உள்ளார்,அவரின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.
1950ம் ஆண்டு தஞ்சையில் பிறந்த எஸ்.வி.சேகர்,ஆரம்ப கால கட்டத்தில் எஸ்.வி.சேகருக்கு கேமராவின் மீதுதான் ஆர்வம் இருந்துள்ளது.அதே போல்,இவர் ஒலிப்பதிவாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், நிகழ்படமெடுப்பது, தொகுத்தல், இயக்குதல், என பல்வேறு தொழில்களை செய்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, நாடகங்களுக்காக சிறப்பு ஒலிகள் தயாரிப்பு, நாடக சம்பத்தப்பட்ட விஷயங்களில் கைதேர்ந்தவர் என்று அறியப்பட்டவர். இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி பயிற்சிபெறுபவர்களின் கூட்டமைப்பிலிருந்து,சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது–ஐ தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றிருக்கிறார்.இலங்கை வானொலிக்காக 275 க்கும் மேற்பட்ட ஒலிச்சித்திரங்களை தயாரித்திருக்கிறார்.
1974–ல் “நாடகப்ரியா” என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார்.இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து,5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறிமுகப்படுத்தியவர்களில் சிலர்,கிரேசி மோகன்,கோபு-பாபு, கிருஷ்ணகுமார்,நிலா.முதன் முதலாக முழுதும் வெளிநாட்டில் வெளிநாடுகளில் (அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா) எடுக்கப்பட்ட “அமெரிக்காவில் அருக்கானி” தொலைக்காட்சி தொடரை இயக்கி தயாரித்தவர்.தன்னுடைய “பெரியதம்பி” நாடகத்தை அமெரிக்காவின் நியூஜெர்சியிலும், வாஷிங்டனிலும், குவைத்திலும் நடத்தினார். அதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாங்காக், ஆகிய நாடுகளில் தன் குழுவுடன் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அமெரிக்காவில் 32 நாட்களில் தன் நாடகக்குழுவினருடன் 28 முழுநீள நாடகக்காட்சிகளை நடத்தி உள்ளார்.நாடக சபாக்களாலும் நிறுவனங்களாலும் இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் சில: நாடக சூப்பர் ஸ்டார்,காமெடி கிங்,சிரிப்பலை சிற்பி,நாடக வசூல் சக்ரவர்த்தி,நகைச்சுவை தென்றல்,நகைச்சுவை இளவரசன்,நகைச்சுவை நாயகன்,சிரிப்புச்செல்வன்,நகைச்சுவை வேதநாயகன்,வாணி கலாசுதாகர நாடக கலாசாரதி,நாடகரத்னா.
இவர் கதாநாயகனாகவும், முக்கிய பாத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.1979ல் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால்“நினைத்தாலே இனிக்கும்”என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் “வறுமையின் நிறம் சிகப்பு”படத்தின் மூலம் மக்களிடையே அறியப்பட்டார். “தினந்தோறும் தீபாவளி” என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.1981ல் விசு இயக்கத்தில் “குடும்பம் ஒரு கதம்பம்” படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.இவர் நடித்த “மணல் கயிறு” இன்றும் மக்களால் பார்க்கப்படும் படம்.ஷங்கர் இயக்கத்தில் “ஜீன்ஸ்” திரைப்படத்தில்,ஐஸ்வர்யராய்க்கு அப்பாவாக நடித்த காட்சிகளை பார்த்தால் இன்றும் நமக்கு வயிறு குழுங்க சிரிப்பு வரும்.2001ல் “கிருஷ்ணா கிருஷ்ணா” என்ற திரைப்படத்தில் நடித்து,இயக்கியும் உள்ளார்.2007ல் “வேகம்” என்ற திரைப்படத்தில்,கதை,திரைக்கதை எழுதியுள்ளார்.இப்படத்தில்,அவரது மகன் அஸ்வின் சேகர் நடித்துள்ளார்.
“நாரதர்” தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.திரைப்படங்களுக்கான மத்திய தணிக்கை குழுவில் மாநில தலைவராக பணியாற்றியிருக்கிறார்.15 ஆண்டுகளாக சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவராக இருந்து வருகிறார்.பிராமணர்கள் ஒற்றுமைக்காக பெடரேசன் ஆப் ப்ராமின் அசோசியேசன்ஸ் சதர்ன் ரீஜியன்(Federation of Brahmin Associations Southern region (FEBAS)) என்ற அமைப்பை துவக்கி நடத்தி வருகிறார்.தமிழக அரசால் கலைவாணர் பதக்கம் (1991), கலைமாமணி பட்டம் (1993) பெற்றிருக்கிறார்.மேலும், மைலாப்பூர் அகாதமியின் சிறந்த நகைச்சுவையாளர் விருதை – தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்றுள்ளார் மற்றும் விஸ்டம் பத்திரிகையின் சிறந்த நகைச்சுவையாளர் விருது(1990) பெற்றுள்ளார்.
எஸ்.வி.சேகரின் மீது சில சர்ச்சைகளும் இருந்தன.பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை முகநூலில் பகிர்ந்ததற்காக, இவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட, 4 பிரிவுகளில் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.இதனால், தலைமறைவாக இருந்துவந்தார் எஸ்.வி.சேகர். பின்னர் மே 2018 அன்று, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் மறுத்தது. உயர் நீதிமன்றம் ஜாமீனை மறுத்த பின்னரும் கூட, காவல்துறையினர் இவரை கைது செய்து வைப்பதில் இருந்து விலகி இருந்தனர். அவர் போலீஸ் பாதுகாப்புடன் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். பின்னர் அவருக்கு 2018 ஜூன் மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. அதே போல் ஆகஸ்ட் 03, 2020 அன்று இந்தியாவின் கொடிக்கு ஒரு மத சாயம் வழங்கப்பட்டது என்று பேசினார். இது சமூக கண்டனங்களுடன் போலீஸில் புகாரும் பதிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 2020 அன்று, கைது செய்யக்கூடாது என்று காவல்துறையினரை பரிசீலிக்க,அவர் நிபந்தனையின்றி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
2006ல் அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார்.மைலாப்பூர் தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தார்.பின்னர்
அதிமுகாவில் இருந்து நீக்கப்பட்டார்.பிறகு,திமுகாவில் சிறிது நாட்களும், காங்கிரஸ் கட்சியில் சிறிது நாட்களும்,தற்போது பி.ஜே.பியில் உள்ளார்.
எம்.எல்.ஏவாக இருந்த போதும்,தற்போதும் ரத்ததானம் முகாம்,இலவச கண் பரிசோதனை போன்ற பல நன்மைகளை செய்து வருகிறார்.எஸ்.வி.சேகர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்.