தடையை மீறி நட்சத்திர ஓட்டல்கள்,கேளிக்கை விடுதிகள்,கடற்கரை என,பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர்,என,போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே இருக்கின்றன.வழக்கமாக,புத்தாண்டு பிறக்கும் போது டிசம்பர்:31ல் நள்ளிரவில்,சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில்,பல ஆயிரம் பேர் திரண்டு,ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்வர்.
அதே போல,நட்சத்திர ஓட்டல்கள்,பண்ணை வீடுகள்,கேளிக்கை விடுதிகள் என அதிகாலை வரை,பாட்டுக் கச்சேரி மற்றும் விதவிதமான உணவுகள் மற்றும் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும்.
தற்போது,புதிய வகை கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால்,கடற்கரைகள்,நட்சத்திர ஓட்டல்கள்,கேளிக்கை விடுதிகள் என,எவ்விதமான பொது இடங்களிலும்,புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட,அரசு தடைவிதித்துள்ளது.
இதனால்,தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்க,மாநிலம் முழுவதும்,ஒரு லட்சம் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
அத்துடன்,சென்னை திருவொற்றியூரில் இருந்து,காமராஜர் சாலை,ஈ.சி.ஆர்., முட்டுக்காடு வரை; அண்ணா சாலை,டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என,368 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.
போக்குவரத்து போலீசார்,162 இடங்களில் பந்தலுடன் கூடிய தற்காலிக சோதனை சாவடிகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து,போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக,டி.ஜி.பி.,திரிபாதி மற்றும் சிறப்பு டி.ஜி.பி.,ராஜேஸ் தாஸ் ஆகியோர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி,பல்வேறு உத்தரவுகளை பிற ப்பித்துள்னனர்.அதன்படி,மாநிலம் முழுவதும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளோம்.
தடையை மீறி,பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர்,பைக் ரேஸ்,குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது,கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப,கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.என கூறினார்.