Main Menu

What’s New?

Connect With Us

உலக யானைகள் தினம்! யானைகளின் சுவாரஸ்யமான தகவல்கள்!! யானைகளை காப்பாற்ற வேண்டும்!!!

Read Carefully
SHARES

உலகம் முழுவதும் யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (70 ஆண்டுகள்). மனிதர்களுக்கு அடுத்தப்படியாக விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை.சிங்கம்,புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை யானைகள்.யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை.யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும்.இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன.ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.

ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.

யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும்.மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று நம்பிக்கை,அதே போல் யானைகளுக்கு மிக முக்கியமான ஒன்று தும்பிக்கை.யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும் உள்ளன.தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது.

யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு,பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையாது.ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையாது.யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத்தந்தங்கள் வியாபாரத்திற்காகவும்,பயன்படுகின்றன. பல யானைகளைக்கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.

யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது.யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன.

Elephant Skin

யானையின் பெரிய உடலைத் தாங்குவதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும்,அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு ஓய்வு அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் ஓய்வு எடுக்காமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி ஓய்வு எடுக்கின்றன.யானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது.மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும்,மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது.

யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈன்றுகின்றன.இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈன்றும் முன்னும், ஈன்ற பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.

யானைகள் பொதுவாக இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இயற்கையாக இறந்துபோகும்.ஆனால் சமீபத்தில் கேரளாவில் யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்படுள்ளது.இதற்கு உலகம் முழுவதிலும் கண்டனங்கள் எழுந்தன.ஏன் வெடி வைத்தார்கள்?“விவசாய நிலத்தில் யானைகள் வந்து அட்டகாசம் செய்கிறதாம்”.யானைகளின் இடத்தில் வீடுகளையும்,நிலத்தையும்,மனிதன் வைத்து விட்டு யானைகளை குறை கூறுவது நியாயமா?யானைகள் எப்போதும் மனிதர்களின் இடத்திற்கு வராதது.மனிதன் தான் யானைகளின் இடத்தில் வாழ்கிறான்.மிருகங்கள் அனைத்தும் காட்டில் மட்டுமே வாழ்கின்றன.காட்டில் வாழும் மிருகங்களை மனிதன் தொந்தரவு செய்கிறான்.

உலக முழுவதிலும் யானைகளின் எண்ணிக்கை குறைத்துகொண்டே செல்கிறது.இதனை கருத்தில் கொண்டு யானைகளின் எண்ணிக்கையை அரசு நடவடிக்கை எடுத்து அதிகரிக்க வேண்டும்.யானைகளின் இறப்பை தடுக்க வேண்டும்.யானைகளை எக்காரணத்தைக் கொண்டும் நாம் கொள்ளக்கூடாது என உலக யானைகள் தினத்தில் மனிதன் முடிவெடுக்க வேண்டும்.


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top